காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடத்தை முற்றுகையிட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-14 22:45 GMT
தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட வேண்டும். ஆற்றுமணல், தாதுமணல், இயற்கை வளங்களின் கொள்ளையை தடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு பழைய கலெக்டர் அலுவலகமான பனகல் கட்டிடத்தை முற்றுகையிடுவதற்காக வந்தனர்.

இவர்கள் யாரும் பனகல் கட்டிடத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக நுழைவு வாயில் கதவை கிழக்கு போலீசார் பூட்டி இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். ஊர்வலமாக வந்தவர்கள் பனகல் கட்டிடம் முன்பு வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் பனகல் கட்டிடத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்