கலபுரகி அருகே காங்கிரஸ்-பா.ஜனதா கட்சியினர் மோதல் போலீஸ் தடியடியால் பரபரப்பு

கலபுரகி அருகே காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் இடையே மோதல் உண்டானது. இதனால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-05-12 22:30 GMT
பெங்களூரு, 

கலபுரகி அருகே காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் இடையே மோதல் உண்டானது. இதனால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் தடியடி

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில், கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி முன்பாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் திரண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வந்த வாக்காளர்களிடம் காங்கிரசுக்கு ஓட்டும்படி காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜனதா வேட்பாளருக்கு ஓட்டுப்போடுமாறு பா.ஜனதாவினரும் கூறினார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் இடையே வாக்குவாதம் உண்டானது. பின்னர் 2 கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் மோதிக் கொண்டனர். அதே நேரத்தில் பா.ஜனதா கட்சியினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றார்கள். இதற்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் நேற்று அப்சல்புராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூருவில் வாக்குவாதம்

இதுபோல, பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜமீர் அகமதுகானும், பா.ஜனதா சார்பில் லட்சுமி நாராயணனும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில், சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடி முன்பாக ஓட்டுப்போட வந்த வாக்காளர்களுடன் ஆதரவு கேட்டபோது காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார், 2 கட்சிகளின் தலைவர்களுடன் சமாதானமாக பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.

மேலும் செய்திகள்