மெயின் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற ரெயில்கள் கீழே இறங்கிச்சென்ற பயணியின் கை முறிந்தது
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரெயில்கள் நடுவழியில் நின்றன.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரெயில்கள் நடுவழியில் நின்றன. இதனால் கீழே இறங்கி நடந்து சென்றபோது, மின்சார ரெயில் மோதியதில் பயணி ஒருவரின் கை முறிந்தது.
ரெயில் சேவை பாதிப்பு
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு வழித்தடத்தில் நேற்று மதியம் 1.10 மணியளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த நீண்டதூர ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்கள் தாதர்- சயான் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
மதிய நேரம் என்பதால் கொளுத்திய வெயில் காரணமாக மின்சார ரெயிலில் கூட்டத்தில் சிக்கி பயணிகள் புழுக்கத்தால் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பயணி மீது மோதியது
இந்தநிலையில், ரெயில்கள் சுமார் அரை மணி நேரம் வரையிலும் புறப்படாமல் நின்றதால் எரிச்சல் அடைந்த மின்சார ரெயில் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி தாதர் மற்றும் மாட்டுங்கா ரெயில் நிலையங்களை நோக்கி நடையை கட்டினர்.
அப்போது, அருகில் உள்ள தண்டவாளத்தில் தாதரில் இருந்து குர்லா நோக்கி விரைவு மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயில் தண்டவாளத்தையொட்டி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பயணி மீது மோதியது.
கை முறிந்தது
இதில், அந்த பயணியின் வலது கை முறிந்தது. வேதனையில் துடித்த அவரை மற்ற பயணிகள் மீட்டனர். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில், அவர் பாந்திரா சாஸ்திரி நகரை சேர்ந்த முகமது அல்தாப் (வயது40) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே மதியம் 1.45 மணியளவில் கோளாறு சரி செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து சீரானது.