நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்ய எதிர்ப்பு: நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டம்
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து வருகிற 17-ந்தேதி முடிவு எடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி,
தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க 36-வது ஆண்டுவிழா புதுச்சேரியில் நடந்தது. இதில் லாரி உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் தற்போது ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புதான் இதற்கு காரணம். அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் ஜி.எஸ்.டி. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல்- டீசல் விலையை மட்டும் இதில் சேர்க்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலை இருந்து வருகிறது.
எனவே பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கக் கூடாது. 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல் ஆண்டுக்கு ஒருமுறைதான் சுங்கவரி வசூலிக்கவேண்டும்.
வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு தொகையும் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வருகிற 17-ந்தேதி டெல்லியில் எங்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் எப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு சண்முகப்பா கூறினார்.