டெல்லியில் தலைமறைவாக உள்ள குட்கா ஆலை உரிமையாளர் விரைவில் கைது

டெல்லியில் தலைமறைவாக உள்ள கோவை குட்கா ஆலை உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Update: 2018-05-09 23:15 GMT
சூலூர்,

டெல்லியை சேர்ந்தவர் அமித் ஜெயின். இவர் கோவை அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் சட்ட விரோதமாக குட்கா ஆலை நடத்தி வந்தார். இவரது ஆலையில் கடந்த மாதம் 27-ந் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக குட்கா ஆலை மேலாளர் ரகுராமன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். உரிமையாளர் அமித் ஜெயின் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் டெல்லி சென்றனர். அங்கு அமித் ஜெயின் வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர் தப்பி சென்றுவிட்டார். அவர்கள் அமித் ஜெயின் செல்போன் அழைப்பு மூலம் அவர் யாரிடம் பேசினார் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் உள்ள அமித் ஜெயின் நண்பர்கள், குட்கா டீலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் குட்கா ஆலை உரிமையாளர் அமித் ஜெயின் இருப்பிடத்தை கண்டு பிடித்து விட்டதாகவும், அவரை பின் தொடர்ந்து வருவதாகவும், விரைவில் பிடிபடுவார் எனவும் தனிப்படையினர் தெரிவித்துள்ளனர். குட்கா ஆலைக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களான கொட்டைப்பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு போன்றவற்றை கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாங்கியதை போலீசார் உறுதி செய்துள்ளனர். மூலப்பொருட்களை சப்ளை செய்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. கண்ணம்பாளையம் குட்கா ஆலையில் போலீசார் சோதனை செய்த போது அமித் ஜெயின் செல்போனுக்கு கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் வெகு நேரம் பேசியது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குட்கா ஆலைக்கு தண்ணீர் கேன்கள் சப்ளை செய்து வருபவர் என்பது தெரிய வந்தது. எதற்காக அமித் ஜெயினிடம் பேசினீர்கள்? என போலீசார் பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்ட போது ‘தண்ணீர் கேன் வாங்கியதற்கு பணம் தர வேண்டும். அது தொடர்பாக தான் பேசினேன். அமித் ஜெயினுக்கும் தனக்கும் குட்கா சம்பந்தமாக எந்த தொடர்பும் இல்லை‘ என்றார்.

ஆனாலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குட்கா ஆலை மேலாளர் ரகுராமனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அமித் ஜெயின் தொடர்பாகவும், குட்கா ஆலை தொடர்பாகவும் அனைத்து தகவல்களையும் அவர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இத்ை-தொடர்ந்து அவர் நேற்று மாலை சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வருகிற 11-ந்தேதிவரை நீதிமன்ற காவலில் அவரை வைக்குமாறு நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரகுராமன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்