இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு கோவையில் 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக, கோவையை சேர்ந்த 5 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது செல்போன், சிம்கார்டுகள், மடிக்கணினி போன்றவை கைப்பற்றப்பட்டன.

Update: 2018-05-10 00:00 GMT
கோவை,

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் (வயது 38) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (35), ரத்தினபுரியை சேர்ந்த சதாம் உசேன் (27), உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சுபைர் (33), போத்தனூரை சேர்ந்த அபுதாகீர் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த கொலைக்கு மூளையாக முபாரக் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கணபதியை சேர்ந்த ஹக்கீம் என்ற பெயிண்டர் கொலைக்கு பழிக்கு பழியாக சசிகுமாரை கொன்றதாக தெரிவித்து உள்ளார். மேலும், வழக்கின் பின்னணியில் ஒரு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை உத்தரவின்பேரில் இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் தேசிய புல னாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர்.குமார் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கடந்த மார்ச் 18-ந் தேதி முபாரக் உள்பட 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அபுதாகீர் வீட்டில் இருந்து 3 செல்போன்கள், சுபைரின் வீட்டில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முபாரக், சதாம் உசேன் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.குறிப்பாக பாப்புலர் பிரண்ட் அமைப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்த வழக்கில் முபாரக்கை மீண்டும் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த பெபின் ரகுமான் (25), உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த அனீஷ் (32), குனியமுத்தூர் சுகுணாபுரத்தை சேர்ந்த ஐதர்அலி (33), துடியலூர் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த முகமதுஅலி ஆகிய 5 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

என்ஜினீயரான பெபின் ரகுமானிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்தி இருந்தனர். கடந்த 2-ந் தேதி இவர் கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொந்தரவு செய்வதாகவும், தன்னை பகடைக்காயாக பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் நடத்திய சோதனையில் செல்போன் மற்றும் டைரியை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

உக்கடம் ஜி.எம். நகரில் உள்ள அனீஷ் வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர். இவர் கண்ணப்பநகரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். அங்கும் அவரை அழைத்து சென்று சோதனை நடத் தினர்.

துடியலூரில் உள்ள சதாம் உசேன் வீடு, வெள்ளக்கிணறில் உள்ள முகமது அலி வீடு, சுகுணாபுரத்தில் உள்ள ஐதர்அலி வீடுகளிலும் நடைபெற்ற சோதனையில் செல்போன் மற்றும் சிம்கார்டுகள், மெமரிகார்டு மற்றும் சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐதர் அலி என்பவருடைய வீட்டில் இருந்து ஒரு மடிக்கணினியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து அந்த வீடுகள் முன்பு கோவை நகர போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? அவர்களுக்கு அமைப்பு ரீதியாக உதவப்பட்டதா? என்ற அடிப்படையில் 5 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்றனர். இந்த சோதனைக்கு பின்னர் 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் சோதனை நடைபெற்ற ஐதர்அலி, பெபின் ரகுமான், அனீஷ் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் விசாரணை என்ற பெயரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாகவும், அத்துமீறி வீடு புகுந்து சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுத்ததாகவும், மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந் தனர்.

மேலும் செய்திகள்