தூத்துக்குடி தெற்கு பீச்ரோட்டில் ‘படகு குழாம்’ அமைக்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் படகு குழாம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் படகு குழாம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படகு குழாம்
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் படகு குழாம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தெற்கு பீச் ரோட்டில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு மேற்கு பகுதியில் சுமார் 850 மீட்டர் நீளமும், 200 மீட்டர் அகலமும் கொண்ட துறைமுகத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பு படகு குழாம் அமைக்க தேர்வு செய்யப்பட்டது. அங்கு சுமார் ரூ.1 கோடி செலவில் படகு குழாம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது.
இங்கு முதல்கட்டமாக படகு தளம் அமைக்கப்பட்டது. மேலும் தலா ரூ.70 ஆயிரம் மதிப்பில் 7 படகுகள் வாங்கப்பட்டன. இதில் காலால் மிதிக்கும் வகையில் உள்ள படகுகள் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து படகு குழாமை சுற்றி சிமெண்ட் தளம் அமைக்கவும், அதன் கரைகளில் பூங்கா அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டது. அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
பணி தீவிரம்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பரிந்துரையின் பேரில் வ.உ.சி. துறைமுகம் தனது சமூக பங்களிப்பு நிதியின்கீழ் படகு குழாம் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் ரூ.80 லட்சம் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது படகு குழாமின் சுற்றுப்பகுதியில் இரும்பு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அறை, நிர்வாக அலுவலகம், டிக்கெட் கவுண்டர், படகுகளை பாதுகாப்பாக வைக்கும் அறை, கழிப்பறை, சிற்றுண்டி விடுதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த அறைகள் அனைத்தும் கன்டெய்னர்களை பயன்படுத்தி அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான மின்வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும் காலால் மிதித்து இயக்கக்கூடிய 6 பெடல் படகுகளும் வாங்கப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு படகு குழாம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.