தோட்டத்தில் குழிதோண்டிய போது மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

திருப்பூரில் உள்ள தோட்டத்தில் குழிதோண்டிய போது மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார். அவரை காப்பாற்ற சென்ற பெண்ணும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-05-09 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் கருவம்பாளையம் மறவன்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. தொழில் அதிபர். இவருடைய வீட்டில் திருச்சி துறையூரை சேர்ந்த சதீஸ்குமார்(வயது 27) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் அவ்வப்போது தோட்டத்து வேலைகளையும் கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டாரை இயக்கியுள்ளார். ஆனால் மோட்டார் இயங்கவில்லை. அதில் ஏதோ பழுது ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் மோட்டாருக்கு தரைவழியாக கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை சரி செய்யும் முயற்சியில் சதீஸ்குமார் ஈடுபட்டார்.

தரைவழியாக செல்லும் வயரை வெளியில் எடுத்து பழுது பார்ப்பதற்காக மோட்டார் அருகில் கடப்பாரையை கொண்டு குழி தோண்டியுள்ளார். அப்போது கடப்பாரை நிலத்தடியில் சென்று கொண்டிருந்த வயரில் பட்டுள்ளது. அப்போது கடப்பாரை வழியாக சதீஸ்குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் தூக்கிவீசப்பட்ட சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தை அந்த வீட்டில் தோட்ட வேலை செய்து வந்த மற்றொரு தொழிலாளியான கொடுவாய் நாட்டன் வலசு பகுதியை சேர்ந்த மணியாள்( 42) என்ற பெண்ணின் மகன் நாற்றாயன்(10) என்ற சிறுவன் பார்த்துள்ளான்.

அந்த சிறுவன் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தனது தாயான மணியாளிடம் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு ஓடி வந்த மணியாள், தரையில் கிடந்த சதீஸ்குமாரை காப்பாற்றுவதற்காக அவரின் உடலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது சதீஸ்குமாரின் உடல்மீது பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் மணியாள் உடலிலும் பாய்ந்தது.

இதில் மணியாளின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவரும் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணியாள் மற்றும் சதீஸ்குமாரின் குடும்பத்தினர் ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். இருவரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் உரிமையாளர் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக வரவேண்டும் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கூறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்ல விடாமலும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி டிரைவரும், காப்பாற்ற சென்ற பெண்ணும் பலியானது அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்