மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் டிஜிட்டல் பேனர் கிழிப்பு போலீசார் விசாரணை

முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-05-09 22:30 GMT
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை மருத்துவமனை தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய, நகர அலுவலகம் உள்ளது. இங்கு அலுவலக பணிகளை கட்சியினர் மேற்கொண்டு இரவில் அலுவலகத்தை பூட்டிவிட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை அலுவலகத்தை கட்சியினர் திறக்க வந்தபோது வாசலில் இருந்த அலுவலக டிஜிட்டல் பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டு இருந்தது. மேலும் வாசலில் இருந்த கட்சியின் தோரண கொடிகளும் கிழித்து எறியப்பட்டு இருந்தது. இதுகுறித்து கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர செயலாளர் காளிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லத்துரை, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வீரசேகரன் உள்பட ஏராளமான கட்சியினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணை

இதுகுறித்து ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் மர்மநபர்கள் கட்சியின் டிஜிட்டல் பேனரை கிழித்து உள்ளனர். அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்