ஆலோசனை கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் சரமாரி புகார்
உத்தமபாளையத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம்
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசியதாவது:-
தேவாரம் பகுதியில் மக்னா வகை ஒற்றைகாட்டு யானை தினமும் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, கரும்பு, மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, உ.அம்மாபட்டி ஆகிய இடங்களில் தோட்டங்களுக்கு காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
இது தொடர்பாக வனத்துறையினரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் தோட்டங்களுக்கு செல்ல அச்சமாக உள்ளது. கேரள மாநிலத்தை போல, காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுத்தள்ள தேனி மாவட்ட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தேவாரம் பெரும்புவெட்டி ஓடை பகுதியில், அனுமதியின்றி தினமும் 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும்.
தேவாரம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு காலை 9 மணிக்கு ஒரு விலையும், மதியம் 12 மணிக்கு ஒரு விலையும் கமிஷன் கடை வியாபாரிகள் நிர்ணயம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.
தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால் அந்த மானியம் பெறுவதற்கு விவசாயிகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இதுமட்டுமின்றி சொட்டுநீர் பாசனத்துக்கு உரிய உபகரணங்கள் வாங்க வேண்டும் என்றால், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சொல்கிற நிறுவனங்களிடம் தான் வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதன்படி அங்கு சென்றால், முதலில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு அதற்குரிய பணத்தை செலுத்த வேண்டும். அதன்பின்னர் அரசு வழங்கும் மானியம் தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை மானிய தொகை கிடைக்கவில்லை. மேலும் தரம் இல்லாத சொட்டு நீர் உபகரணங்களை வழங்குகின்றனர். இதனால் 2 ஆண்டுகளுக்குள் உபகரணங்களை மாற்றி அமைக்கும் நிலை ஏற்படுகிறது. தனியார் நிறுவனங்களுடன், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தொடர்பு வைத்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் சரமாரி புகார் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் புகார் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசும்போது கூறியதாவது:-
சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியம் உடனடியாக கிடைக்க வேண்டும். இதில் தவறான வழிகாட்டுதல் இருந்தால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவொரு மானியத்துக்காகவும் இடைத்தரகர்களை விவசாயிகள் அணுக வேண்டாம்.
அதிகாரிகளிடம் விவசாயிகள் நேரடியாக சென்று திட்டம், சலுகைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்தால் என்னிடம் புகார் தெரிவிக்கலாம். தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகளை அணுகலாம். விவசாய நிலங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து வனத்துறையினரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.