நீச்சல் தெரியாத சிறுவர்களை நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது

நீச்சல் தெரியாத சிறுவர்-சிறுமிகளை நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது என்று பெற்றோர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-05-09 22:30 GMT
தேனி

தேனி மாவட்டத்தில் சமீப காலங்களாக நீர்நிலைகளில் மூழ்கி பலர் உயிர் இழந்து வருகின்றனர். கடந்த மாதம் பழனிசெட்டிபட்டியில் கூலித்தொழிலாளி ஒருவர் மதுபோதையில் குளிக்க சென்ற போது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி உயிர் இழந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தேனி அருகே அம்மாபுரத்தில் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி 3 சிறுவர்களும், நேற்று முன்தினம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் குளத்து நீரில் மூழ்கி 2 சிறுவர்களும் பலியானார்கள். இந்த சம்பவங்களை தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். சிறுவர்கள் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக ஆறு, குளம், ஏரி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் பெற்றோர்களும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோடை விடுமுறை நாட்களில் தங்களின் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நீச்சல் தெரியாதபட்சத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது.

நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும் தனியாக ஆறு, குளம், ஏரி, கண்மாய் மற்றும் அணைக்கட்டுகளில் சென்று குளிப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு நீச்சல் தெரிந்த நபர்களோடு குழுவாக நீர்நிலைகளுக்கு செல்வது நலம்.

நீர்நிலைகளில் சுழல் உள்ள பகுதிகள், புதை மணல் உள்ள பகுதிகள், சகதி நிறைந்த பகுதிகள், ஆழமான பகுதிகள் போன்ற இடங்களின் தன்மை அறியாமல் குளிக்க செல்வதோ, டைவ் அடித்து குளிப்பதோ கூடாது. குடிபோதையில் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்ச உயிர் பாதுகாப்பு முதலுதவி முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்