குன்னூர் தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Update: 2018-05-08 22:42 GMT
குன்னூர்,

இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் என்று அழைக்கப்படும் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு ஒருவருடம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் ஆயுத பயிற்சி, இந்திமொழி பயிற்சி, உடற்பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சியை முடிக்கும் வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டு மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில் உள்ள படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த நிலையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தரைப்படை மற்றும் விளையாட்டு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் ராணுவ வீரர்களின் மகன்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உயரம், எடை, மார்பளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகிய தேர்வுகள் நடை பெற்றன.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:- ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு எதிர்வரும் வாரத்தில் எழுத்து தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைசீசன் தொடங்கி உள்ளதால் குன்னூரில் உள்ள விடுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ராணுவ தேர்வுக்காக வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தங்க இடம் கிடைக்காமல் அவதி அடைந்தனர். இதனால் குன்னூர் பிளாக்பிரிட்ஜ், பஸ்நிலையம் மற்றும் வெலிங்டன் பேரக்சில் உள்ள சாலையோரங்களில் படுத்து இரவை கழித்தனர். தேர்வு முடிந்த பிறகு அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்