சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் மகன் பிறந்தநாளை கொண்டாடிய வாலிபர் கடலில் மூழ்கினார்

சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய வாலிபர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினார்.

Update: 2018-05-08 23:15 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் ஜான் லெபோன் (வயது 50). இவருடைய மகன் இமானுவேல் (25). பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இமானுவேலின் மனைவி தெலஸ்தினா மேரி. இவர்களுக்கு ஆரோன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தைக்கு நேற்று முதலாவது பிறந்த நாள் ஆகும். இதை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக பிரான்சில் இருந்து இமானுவேல் புதுச்சேரி வந்தார். மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

குழந்தை ஆரோனின் பிறந்த நாளான நேற்று இமானுவேல், அவருடைய மனைவி தெலஸ்தினா மேரி, தந்தை ஜான் லெபோன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் என 11 பேர் புதுச்சேரியில் இருந்து சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு கடற்கரையையொட்டி உள்ள தென்னந்தோப்பில் ‘கேக்’ வெட்டி குழந்தையின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள். பின்னர் அரியாங்குப்பத்தில் உள்ள ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் சின்ன வீராம்பட்டினம் கடற் கரைக்கு வந்தனர்.

அங்கு அவர்கள் கடல் அலையில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது திடீரென எழுந்த ஒரு ராட்சத அலையில் இமானுவேல் மற்றும் அவரது உறவினர்கள் சிக்கினர். அவர்களில் சிலரை அலை வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். சத்தம் கேட்டு அங்கு குளித்துக்கொண்டிருந்த சிலரும், சின்ன வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களும் ஓடிவந்து அலையில் சிக்கி தத்தளித்தவர்களை போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் இமானுவேலை மட்டும் காணவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடலுக்குள் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் இமானுவேலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுது துடித்தனர்.

இதுபற்றி அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கடலோரக் காவல் போலீசாரிடம் தெரிவித்தனர். இதன்பின் சின்னவீராம்பட்டினம் மீனவர்களின் உதவியுடன் படகில் கடலுக்குள் சென்று இமானுவேலை தேடினர்.

கடலோரக் காவல் போலீசாரும் தங்களது படகில் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் இந்த தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

மகன் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வாலிபர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்