8 வழி சாலை திட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு
8 வழி சாலை திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சேலத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சேலம்
சேலம் வடக்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் அருள், துணைத்தலைவர் கார்த்திக், பசுமை தாயக மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது:- சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, எருமாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் ஏழை சிறு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. மேலும் விவசாயிகளை பாதிக்காத வகையில் வேறு வகையில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என அனைவரும் தெரிவித்து வருகிறோம். இருந்தபோதிலும் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியது. இதில் தமிழகத்தில் தேர்வு நடத்த இடம் இல்லாததது போல், பிற மாநிலங்களுக்கு சென்று மாணவர்களை தேர்வு எழுத வைத்தது கண்டனத்துக்கு உரியது. இதையொட்டி உயிரிழப்புகள் ஏற்படுவதால் நீட் தேர்வை கைவிட வேண்டும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். மேலும் சேலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.