குதிரைப்படையை வலிமையாக்கும் சென்னை போலீஸ் புதிதாக சேர்க்கப்பட்ட குதிரைகளுக்கு சிறப்பு பயிற்சி

குதிரைப்படையை வலிமையாக்கும் பணியில் சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 21 குதிரைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2018-05-08 23:15 GMT
சென்னை, 

சென்னை மாநகர போலீசின் பாரம்பரியத்தைப்போல், சென்னை போலீசின் குதிரைப்படையும் பாரம்பரியம் மிக்கது. இந்த குதிரைப்படை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் 1670-ம் ஆண்டு அப்போதைய மாகாண கவர்னர் வில்லியம் லாங்கன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவரது பாதுகாப்பு பணிக்காக அந்த குதிரைப்படை பயன்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் 1800-ம் ஆண்டு முதல் இந்த குதிரைப்படை சென்னை போலீஸ் குதிரைப்படையாக மாற்றப்பட்டது. அப்போது போலீஸ் சூப்பிரண்டாக இருந்த வால்டர் கிராண்ட் என்பவரால் இந்த குதிரைப்படை போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

21 குதிரைகள் சேர்ப்பு

1926-ம் ஆண்டு முதல் 15 குதிரைகளோடு இந்த குதிரைப் படை செயல்பட்டது. பாதுகாப்பு பணிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த குதிரைப்படை போலீசாரின் ரோந்துப்பணியில் பெரும்பங்காற்றி வந்தது. இந்த குதிரைப்படையில் சமீபகாலங்களில் 20 குதிரைகள் பணியில் இருந்தன.

அவற்றில் 10 வயதை தாண்டிய 7 குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. மீதி 13 குதிரைகளோடு செயல்பட்டு வந்த இந்த குதிரைப்படையில் தற்போது 11 பெண் குதிரைகள் உள்பட 21 குதிரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. முதன் முறையாக குதிரைப்படையில் 34 குதிரைகள் உள்ளன.

குளிர்சாதன லாயங்கள்

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 21 குதிரைகளும் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புடையதாகும். இந்த குதிரைகளுக்கு தனித்தனியாக பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. 21 குதிரைகளில், 20 குதிரைகள் செட்டிநாடு விவசாய பண்ணை சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. ஒரு குதிரையை மெட்ராஸ் ‘ரேஸ்கிளப்’ உறுப்பினர் பாக்கியசாமி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த குதிரைகளுக்காக சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குதிரைப்படை லாயம் செயல்படுகிறது. இங்கு மணல் குளியல் போடுவதற்காக புதிதாக மணல் நிரப்பப்பட்ட பகுதி ஒன்றும், கோடை வெப்பத்தை சமாளிப்பதற்காக புதிதாக 5 குளிர்சாதன லாயங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

சிறப்பு பயிற்சி

21 குதிரைகள் புதிதாக சேர்க்கப்பட்டதின் மூலம் சென்னை போலீஸ் குதிரைப்படை புத்துணர்ச்சி பெற்றுள்ளது. முதன் முறையாக சென்னை போலீஸ் குதிரைப்படையில் 34 குதிரைகள் இடம்பெற்றுள்ளன. குதிரைகள் தங்குவதற்காக குளிர்சாதன லாயங்கள் திறக்கப்பட்டுள்ளன. குதிரைகள் மணல் குளியல் போடுவதற்கு அதிகமாக ஆசைப்படும். இதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

காலியாக இருந்த குதிரை பராமரிப்பாளர் பணியில் 28 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 21 குதிரைகளுக்கும் 3 மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு முழுமையாக ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்படும். மேலும் இந்த குதிரைகள் தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வகையிலும் நவீனமாக பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்