பூண்டி ஏரி வறண்டு விடும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள்
பூண்டி ஏரி வறண்டு விடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளனர்.
சென்னை,
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் உள்ள தண்ணீர் உதவுகிறது. இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூண்டி ஏரியில் பெறப்படும் தண்ணீரை இந்த ஏரிகளில் நிரப்பி குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதுடன், சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்து எடுக்கப்படுவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதே போல் சோழவரம் ஏரியும் முற்றிலுமாக வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இந்த 2 ஏரிகளும் வறண்டு விட்டால் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் ஒரு வித அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
வறண்டு விடும் அபாயம்
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.257 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் நீர்மட்டம் உயரவில்லை. நேற்றைய நிலவரப்படி இந்த 4 ஏரிகளிலும் 3.260 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது.
குறிப்பாக பூண்டி ஏரியில் 227 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. இங்கிருந்து குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 290 கன அடி வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதிக வெப்பத்தால் ஏரியில் இருக்கிற நீர் ஒருபுறம் ஆவியாகி வருகிறது. இதனால் இன்னும் 10 நாட்களில் பூண்டி ஏரி வறண்டு விடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
மழைநீர் சேகரிப்பு
இதனை ஈடுகட்ட கோடை மழைநீரை சேகரிப்பதன் மூலம் வருங்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்படாமல் தடுப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைவதையும் தடுக்க முடியும். எனவே கோடைமழை பெய்தால் மழைநீர் சேகரிப்பு குழாய்கள் மூலம் முறையாக மழைநீரை சேமிக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்.
பூண்டி, சோழவரம் ஏரிகள் வறண்டாலும், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தலா 1 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் உள்ளது. இதை வைத்து நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூண்டி ஏரி 1945-ம் ஆண்டுக்கு பிறகு 11 முறை முற்றிலுமாக வறண்டது. தற்போது 12-வது முறையாக பூண்டி ஏரி வறண்டு விடும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.