பாவூர்சத்திரத்தில் பரபரப்பு போலீஸ் நிலைய வளாகத்தில் ஏட்டு தற்கொலைக்கு முயற்சி வி‌ஷம் குடித்தவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏட்டு வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தென்காசி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-05-08 20:30 GMT

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏட்டு வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தென்காசி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் ஏட்டு

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் அல்போன்ஸ் (வயது 45). இவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில் வசித்து வருகிறார்.

அல்போன்சுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

வி‌ஷம் குடித்தார்

அதன்பிறகு அல்போன்ஸ், போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு வந்தார். மாலையில் அவருடைய மனைவி மற்றும் மகன்கள் போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு அல்போன்சுடன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அதன்பிறகு அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். தன்னுடன் பணிபுரியும் சக போலீசார் மத்தியில் மனைவி தகராறு செய்து விட்டாளே என்று அல்போன்ஸ் மனம் உடைந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் கழிவறை பகுதிக்கு சென்ற அல்போன்ஸ் அங்கு வி‌ஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

உடனே அங்கு இருந்த சப்–இன்ஸ்பெக்டர் வாசுதேவன், ராஜரத்தினம் மற்றும் போலீசார் ஏட்டு அல்போன்சை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஏட்டுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏட்டு அல்போன்ஸ் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர், இளம்பெண்ணுடன் சிக்கினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் மற்றொரு ஏட்டு அல்போன்ஸ் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்