குடிநீர் வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை

குடிநீர் வழங்க கோரி காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-08 22:45 GMT
காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்தது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்கவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் விமல்ராஜ், மாவட்ட நிர்வாகி பிரகாஷ் ஆகியோர் தலைமையில் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பழுதான மின்மோட்டாரை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தாலுகா அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தாலுகா அலுவலகத்தில் நடக் கும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அதிகாரியை சந்தித்து மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனை ஏற்ற கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, ஜமாபந்தி அலுவலர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்