கோவில்பட்டியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை: தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட கூலி வழங்க முடிவு

கோவில்பட்டியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட கூலி வழங்க முடிவு செய்யப்பட்டது.

Update: 2018-05-08 20:30 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட கூலி வழங்க முடிவு செய்யப்பட்டது.

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 200–க்கு மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 150 தீப்பெட்டிகளில் தீக்குச்சிகளை அடைப்பதற்கு கூலி ரூ.5–ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உயர்த்தப்பட்ட கூலிக்கு பதிலாக பழைய கூலியே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி தீப்பெட்டி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்தம் செய்து, கோவில்பட்டி தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2–வது நாளாக கூசாலிபட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

பின்னர் மாலையில் கோவில்பட்டி தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் அலுவலகத்தில் கூலி உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. மதுரை தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் சரவணன், தூத்துக்குடி தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜூ, நே‌ஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, மோகன்தாஸ், 5–வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், தொ.மு.ச. பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் ஏராளமான தீப்பெட்டி தொழிலாளர்களும் முற்றுகையிட்டு அமர்ந்து இருந்தனர்.

உயர்த்தப்பட்ட கூலி வழங்க முடிவு

கூட்டத்தில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குவது தொடர்பாக, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் வருகிற 15–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில்பட்டி தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்.

இதில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை அரசு நிர்ணயிக்கும். அதுவரையிலும் உயர்த்தப்பட்ட கூலியையே தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்