சைக்கிள்-மாட்டு வண்டியில் சென்று ராகுல் காந்தி பிரசாரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சைக்கிள்-மாட்டு வண்டியில் பிரசாரம் செய்தார். அப்போது பா.ஜனதா அரசு தனது பணக்கார நண்பர்களுக்கு உதவ பாமரர்களின் பணத்தை பறிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

Update: 2018-05-07 23:33 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கர்நாடகம் வந்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நேற்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று குற்றம்சாட்டினார். பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கோலார் மாவட்டம் மாலூரில் சைக்கிளில் சென்று ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில இடங் களில் மாட்டு வண்டி மீது ஏறி நின்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது.

“உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பது ஏன்? என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மத்திய ஆளும் பாரதீய ஜனதா அரசு பாமர மக்களிடம் இருந்து பணத்தை பறித்து தனது பணக்கார நண்பர்களுக்கு கொடுக்க விரும்புகிறது. அதற்காக பாமர மக்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் பணத்தை பறிக்கிறது.

உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் உயர்ந்து கொண்டு இருக்கிறது. முன்பு கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 140 அமெரிக்க டாலராக (ஒரு டாலரின் மதிப்பு ஏறத்தாழ ரூ.67) இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 70 அமெரிக்க டாலராக குறைந்து உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாயை சேமித்து உள்ளது. இந்த பணம் எங்கே போகிறது?

பெட்ரோல், டீசலை ஏன் ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை என்பதை மக்களுக்கு பா.ஜனதா அரசு விளக்க வேண்டும். காரணம் இதுதான் தனக்கு வேண்டிய 5 முதல் 10 வரை உள்ள தொழில் அதிபர் நண்பர்களுக்கு பணத்தை கொடுக்க பா.ஜனதா அரசு விரும்புகிறது. அதற்காக பாமர மக்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்கிறது. இரு சக்கர வாகனங்கள், லாரி-பஸ் மற்றும் வாகனம் ஓட்டுகிறவர்களின் சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து தனது பணக்கார நண்பர்களுக்கு கொடுக் கிறது.”

காங்கிரஸ் அரசு பசவண்ணரின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பா.ஜனதாவினர் ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். இதில் எது நன்மை என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி, தனது நிலையை வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அதாவது, மதசார்பற்ற கட்சியை சேர்ந்த அவர், தேர்தலில் மதவாத கட்சியுடன் கூட்டணியா? அல்லது மதசார்பற்ற கட்சியுடன் (காங்கிரஸ்) கூட்டணியா? என்று தேர்தலுக்கு முன்பே தெளிவுபடுத்த வேண்டும். மக்களை குழப்ப வேண்டாம். குமாரசாமி தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி, மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதா? என்பதை அறிவிக்க வேண்டும்.

பிரதமர் மோடி பேசும் கூட்டங்களில் எல்லாம், கர்நாடக காங்கிரஸ் அரசு கமிஷன் அரசு என்றும், காங்கிரஸ் ஊழல் கட்சி என்றும் பேசி வருகிறார். அவ்வாறு பேசும் மோடியின் அருகில், ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்த மந்திரிகள் அமர்ந்துள்ளனர். அவர்களை அருகில் வைத்துக்கொண்டு மோடி, ஊழலை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. எது ஊழல் கட்சி என்று மோடி யோசித்து பேச வேண்டும்.

ஏற்கனவே ரெட்டி சகோதரர்கள் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா வெற்றி பெற்றால் மாநிலத்தில் உள்ள வளங்களை சுரண்டி விடுவார்கள். நாட்டை சுரண்டும் ஆட்சி நமக்கு தேவையா? என்பதை மக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மேலும் செய்திகள்