அரசு வேலை வேண்டி அதிகாரிகள் முன்னிலையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

அரசு வேலை வேண்டி அதிகாரிகள் முன்னிலையிலேயே கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-05-08 00:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அந்த வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து வரிசையில் நின்று மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமியிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்திற்குள் மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் மனு கொடுக்க சென்றார்.

அவர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் சென்று தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். பின்னர் கூட்ட அரங்கத்திற்குள்ளேயே வருவாய் அதிகாரி முன்னால் நின்றபடி தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மேலும், மாற்றுத்திறனாளியாகிய தனக்கு உடனடியாக அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கூட்ட அரங்கத்திற்குள் சென்ற போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் தாராபுரம், சித்திரகுப்தன் பாளையம், ஓடைத்தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 31) என்பது தெரியவந்தது. இவர் கடந்த பல வருடங்களாக அரசு வேலை வேண்டி விண்ணப்பித்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அவர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். கலெக்டர் அலுவலக வளாக வாசலில் இருந்தே போலீசார் பலத்த சோதனை நடத்திய பின்னரே பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இந்த சோதனையை மீறி மாற்றுத்திறனாளி ஒருவர், பாட்டிலில் மண்எண்ணெயை எடுத்து வந்து கூட்ட அரங்கத்திற்குள்ளேயே வைத்து தீக்குளிக்க முயன்றுள்ளது அரசு அதிகாரிகள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்