தேனி அருகே மனைவி விஷம் குடித்ததால் தொழிலாளி தற்கொலை
தேனி அருகே மனைவி விஷம் குடித்ததால், தூக்குப்போட்டு கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அல்லிநகரம்,
தேனி அருகே உள்ள சொக்கதேவன்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 37). விவசாயி. அவருடைய மனைவி ஜெயதேவி (35). கடந்த 6-ந்தேதியன்று இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் நடத்திய விசாரணையில், வயிற்று வலி தாங்க முடியாமல் ஜெயதேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்தநிலையில் சிகிச்சை பெறுகிற தனது மனைவி இறந்து விடுவாரோ? என்ற கவலையுடன் ரத்தினம் காணப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று மதியம் ரத்தினம், அவருடைய மகன் ஆதிஈஸ்வரன் (14) ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற ஜெயதேவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் 2 பேரும் செல்வோம் என்று ரத்தினம் ஆதிஈஸ்வரனிடம் கூறினார். மேலும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை என்றும், அருகே உள்ள விற்பனை நிலையத்தில் பெட்ரோல் வாங்கி வருமாறு ஆதிஈஸ்வரனிடம் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பெட்ரோல் வாங்குவதற்காக ஆதிஈஸ்வரன் சென்று விட்டான். வீட்டில் தனியாக இருந்த ரத்தினம், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த ஆதிஈஸ்வரன், தனது தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.