ஓட்டேரியில் குடிசை மாற்று வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓட்டேரியில் குடிசை மாற்று வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-05-07 22:45 GMT
திரு.வி.க நகர், 

சென்னை ஓட்டேரி பாலம் அருகே நேற்று காலை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் ஜார்ஜ் மற்றும் பகுதி துணை செயலாளர் அனுசியா தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் பெருமாள்சாமி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் முன்னிலையில் சுமார் 20 பெண்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.

கட்டணம் செலுத்த வேண்டும்

ஓட்டேரி-கொன்னூர் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகின்றன. இதில் 315 குடும்பத்தினருக்கு பெரும்பாக்கம் மற்றும் கண்ணகி நகர் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டன.

பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் குடியிருப்பு வாசிகள் ரூ.76 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், கண்ணகி நகரில் உள்ள குடியிருப்பில் ஒதுக்கப்படும் வீடுகளுக்கு ரூ.16,500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கேட்டதாக தெரிகிறது.

வீடுகள் ஒதுக்குதல்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங் கள் எழுப்பினர். மேலும் தங்களுக்கு அயனாவரம் பக்கத்தில் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சுமார் 1 மணி நேரம் கழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, பாதிக்கபட்டவர்கள் கேட்டுகொண்டதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு பெரும்பாக்கம் மற்றும் கண்ணகி நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டன. அவர்கள் நேரில் சென்று வீடுகளை பார்த்து சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர். கூவம் நதி பக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு மட்டுமே வீடுகள் முழுவதும் இலவசமாக ஒதுக்கபடும். மற்றவர்களுக்கு இடத்திற்கு ஏற்றார்போல், அரசு விதிப்படி குடியிருப்பு வீடுகளின் கட்டிட மதிப்பில் 10 சதவீதம் கட்டாயம் கட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றே அவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். குடியிருப்புவாசிகளும் கட்ட தயாராக இருக்கும் பட்சத்தில், சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்