விலை உயர்ந்த செல்போனை நோட்டமிட்டு பறித்த 2 பேர் கைது
விலை உயர்ந்த செல்போனை நோட்டமிட்டு பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்பேடு,
சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்தவர் சித்திகனி(வயது 36). இவர் நேற்று முன்தினம் வடபழனி 100 அடி சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் வளாகத்தில் நின்றுகொண்டு தனது விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தில் வட்டமிட்ட 2 பேர் சட்டென்று சித்திகனியின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச்சென்றார்கள். உடனடியாக அவர் இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரோந்து பணியிலிருந்த வடபழனி போலீசார் விரைந்துவந்து அவர்களை மடக்கிப்பிடித்தார்கள்.
விசாரணையில் அவர்கள் சென்னை கே.கே.நகர், ராணி அண்ணாநகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திகேயன்(21), டில்லிபாபு என்பவரின் மகன் விக்னேஷ் (19) என்பது தெரியவந்தது. 2 பேரையும் வடபழனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். அவர்களிடமிருந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.