காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் தமிழ் அறிஞர்கள் பேரவை மாநாட்டில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழ் அறிஞர்கள் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-05-07 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு தமிழ் அறிஞர்கள் பேரவையின் முதல் மாநில மாநாடு தஞ்சை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி கொடியை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஏற்றி வைத்தார். ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் திருவள்ளுவர்சிலை ஆகியவற்றுக்கு கரந்தை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் சுந்தரவதனம் மாலை அணிவித்தார்.

மாநாட்டிற்கு கரந்தை தமிழ்ச்சங்க செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். நிறைவேற்றுக்கழக உறுப்பினர் ராஜமன்னார் வரவேற்றார். மாநாட்டை பேராசிரியர் தெய்வநாயகம் தெடங்கிவைத்து பேசினார். மாநாட்டில் பேராசிரியர்கள் சிவக்கொழுந்து, கலியபெருமாள், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் பேராசிரியர் கு.வே.பாலசுப்பிரமணியனுக்கு இலக்கிய செம்மல் விருது வழங்கப்பட்டது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெறுவதற்கு கரந்தை தமிழ்சங்கம் எடுத்துக்கொண்ட முயற்சியில் இணைந்து 1 கோடி கையெழுத்து இயக்கம் பெற்று செம்மொழி மாநாடு, ஊர்வலம் நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது. தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத்தந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு பாராட்டு, நன்றி தெரிவிப்பது.

தமிழ்செம்மொழி அந்தஸ்து பெறவும், தமிழ் சார்ந்த பணிகளை செய்து வரும் கரந்தை தமிழ்ச்சங்கத்துக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்துக்கு காவிரிநீர் நிரந்தரமாக கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் உடனே அமைக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை கடுமையாக எதிர்ப்பதுடன் மருத்துவ படிப்புக்கு பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அனைவரும் படிக்கும் கையில் சிறந்த கல்வியாளர்களின் ஆலோசனையோடு புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்தியஅரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் தஞ்சையில் இதுவரை தொடங்கப்படவில்லை. மேலும் தஞ்சை, கும்பகோணம் நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்களுக்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் விவசாய கடன், மானியத்துடன் கூடிய உரம், விதைநெல், விவசாய கருவிகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். நெல், கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைகிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் கரந்தை உமாமகேஸ்வரனார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்