விக்கிரவாண்டியில் கிணற்றில் வாலிபர் பிணம்: கொலையா? போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-05-07 22:30 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பின்புறமுள்ள விவசாய தரைக்கிணற்றில் நேற்று காலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விழுப்புரம் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் விக்கிரவாண்டி உஸ்மான் நகரை சேர்ந்த பாதுஷா மகன் ஆசிப்(வயது 19) என்பதும், பிளஸ்-2 வரை படித்து முடித்துள்ள இவர் நேற்று முன்தினம் காலை வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்ததும் தெரியவந்தது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிப்பின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் ஆசிப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிப் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்