நெல்லை அருகே துணிகரம்: தனியார் பள்ளிக்கூடத்தில் ரூ.20 லட்சம் கொள்ளை

நெல்லை அருகே தனியார் பள்ளிக்கூடத்தில் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2018-05-07 23:00 GMT
தாழையூத்து,

நெல்லை அருகே உள்ள சங்கர்நகரில் ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் ‘நீட்‘ தேர்வு நடைபெற்றது. பின்னர் மாலையில் பள்ளியை காவலாளிகள் பூட்டி விட்டு காவலுக்கு இருந்தனர்.

இந்த நிலையில் இரவில் மர்ம நபர்கள் பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டு சுவர் வழியாக உள்ளே புகுந்தனர். பள்ளிக்கூட அலுவலக அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருந்த 4 பீரோக்களை உடைத்து அதில் இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்தவர்கள் அலுவலக அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கூட முதல்வர் உஷாராமன் இதுபற்றி தாழையூத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோவில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து பள்ளிக்கூடத்தில் இருந்து தெற்கு நோக்கி ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த துணிகர கொள்ளை தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். நெல்லை அருகே பள்ளிக் கூடத்தில் ரூ.20 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்