நாகரீகம் இல்லாதவர் போன்று பிரதமர் மோடி பேசுகிறார் சித்தராமையா தாக்கு

4 ஆண்டு ஆட்சியின் தோல்விகளை மறைக்க பொய் கூறும், பிரதமர் நரேந்திர மோடி நாகரீகம் இல்லாதவர் போன்று பேசுகிறார் என்று முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.

Update: 2018-05-07 00:04 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் வருகிற 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக கர்நாடகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரசாரத்தின்போது, நரேந்திர மோடி கர்நாடக அரசு மற்றும் சித்தராமையாவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதாவது, 10 சதவீத கமிஷன் அரசு, ‘சித்தா ரூபய்யா சர்க்கார்(ஊழல்)’ என்றும் விமர்சித்தார். இதுகுறித்து, பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து கண்ணியமான வார்த்தைகளை எதிர்பார்க்கிறோம். அவர் பா.ஜனதாவினரின் மொழியில் ஒரு நாகரீக நபராய் பேசவில்லை. அவர் கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சிக்கிறார். இது பிரதமராய் இருப்பவர் பேசும் மொழி அல்ல. நாகரீகம் இல்லாதவர் போன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது நான் பதில் அளிக்க கூடாது என்று தான் இருந்தேன். ஆனால், அவர் கூறுவதை உண்மை என்று பொதுமக்கள் நம்பி விடுவார்களோ? என்பதால் தான் அவரை தாக்கி பேச வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.

அனைத்து வகையான மத்திய விசாரணை அமைப்புகளும் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் சாட்சிகள் இருந்தால் அதை அவர் பொதுமக்களிடம் அளிக்கட்டும். நரேந்திர மோடி தனிப்பட்ட நபரை தாக்கி பேசுவதன் மூலம் அவருடைய அற்பத்தனத்தை காட்டுகிறார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று பொறுப்பு வகித்துள்ள 4 ஆண்டுகளில் அவர் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளார். மகதாயி பிரச்சினையை தீர்க்க விடாமல் சோனியா காந்தி தடுத்ததாக நரேந்திர மோடி குற்றம்சாட்டுகிறார். சோனியா காந்தி பிரதமராக பொறுப்பு வகித்தது இல்லை. தன் தோல்விகளை மறைக்க நரேந்திர மோடி பொய்களை கூறி வருகிறார்.

சட்டசபை தேர்தலில் முழுவதுமாக நரேந்திர மோடியையே சார்ந்து இருப்பதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் என்னிடம் கூறியுள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் கர்நாடக பா.ஜனதா முழுவதுமாக பிரதமரையே சார்ந்துள்ளது. எடியூரப்பா, ஈசுவரப்பா, அனந்தகுமார், அனந்தகுமார் ஹெக்டே, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு கூட கர்நாடக தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கடலோர கர்நாடகத்தில் மதவாத பிரச்சினையை பா.ஜனதா தூண்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்