தேனீக்கள் விரட்டியதால் விபரீதம்: சுற்றுலா சென்ற மாணவி அணையில் தவறி விழுந்து பலி

ஒட்டன்சத்திரம் அருகே, சுற்றுலா சென்ற மாணவி தேனீக்களிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, அணையில் தவறி விழுந்து பலியானார்.

Update: 2018-05-06 23:30 GMT
சத்திரப்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோபால்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் மீனலோசனி (வயது 18). இவர் நத்தத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இந்த நிலையில் நேற்று மீனலோசனி தனது தோழிகளுடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணைக்கு சுற்றுலா சென்றார்.

சிறிது நேரம் தோழிகளுடன் சேர்ந்து அணையை சுற்றிப்பார்த்த அவர், பின்னர் அங்குள்ள படிக்கட்டுகள் வழியாக அணையின் கீழ் பகுதிக்கு சென்றார். அப்போது மதகு அமைந்துள்ள சுவற்றின் மேல் இருந்த தேன் கூடு திடீரென கலைந்தது. இதனால் கூட்டில் இருந்து வெளியேறிய தேனீக் கள் அங்கு நின்றுகொண்டிருந்த மீனலோசனியை சரமாரியாக கொட்டின.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனலோசனி, தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வேகமாக ஓடினார். அப்போது எதிர்பாராதவிதமாக அணைக்குள் அவர் தவறி விழுந்தார். இதை அவருடன் சென்ற தோழிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீனலோசனியை காப்பாற்றும்படி அவர்கள் கூச்சல் போட்டனர். அவர்களுடைய சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர், அணையில் தண்ணீரில் மூழ்கிய மீனலோசனியை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே மீனலோசனி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்