குடகனாறு அணையின் நீர்மட்டம் குறைவு எதிரொலி: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; பயிர்கள் கருகுகின்றன; விவசாயிகள் கவலை

வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையின் நீர்மட்டம் முற்றிலும் குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2018-05-06 23:15 GMT
வேடசந்தூர் 


குடகனாறு பழனி மலையின் கிழக்கு கோடி அடிவாரத்தில் தொடங்கி ஆத்தூர், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் வழியே பயணித்து வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரிக்கு வருகிறது. பின்னர் அரவக்குறிச்சி வழியாக தன்னுடைய 109 கிலோ மீட்டர் நீண்ட பயணத்தை முடித்து, கரூர் மாவட்டம் மூலப்பட்டியில் உள்ள அமராவதி ஆற்றில் கலக்கிறது. மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு மற்றும் மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் குடகனாற்று நீர்வரத்தில் முக்கிய பங்குவகிக்கிறது.

இதில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்காக அழகாபுரி குடகனாற்றில் 15 ஷட்டர்கள் கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையால் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் விவசாய நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் அணையின் மொத்த கொள்ளளவான 27 அடியில் 9 அடி வரை மட்டுமே தண்ணீர் தேங்கியது. அதன் பிறகு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தற்போது அணை ஷட்டர்களின் முன்பு வெறும் 2.95 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

அணை முழுவதும் வறண்டு விட்டதால் சுற்று வட்டாரத்தில் உள்ள பாலப்பட்டி, காசிபாளையம், விருதலைப்பட்டி, கூவக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்