குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் உறுதி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Update: 2018-05-06 22:45 GMT
காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே உள்ள சாத்தரசன்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் சாத்தரசன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குடிநீர், சாலை வசதி வழங்குவதற்கு தேவையான பணிகளை நிறைவேற்றி தரவேண்டும் என உள்ளிட்ட 162 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் மனுதாரர்கள் முன்னிலையில் மனுக்கள் ஆய்வு செய்ததுடன், அதுதொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினர். பின்னர் முகாமில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-

மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அரசின் திட்டங்கள் கிராமப்புற பகுதிகளில் உள்ள கடைக்கோடி மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து துறை அலுவலர்களும் கிராம பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெற்று உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் குடிநீர் திட்டப்பணிக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்பகுதிகளில் போதிய அளவு நல்ல தண்ணீர் இருந்தால் அங்கு சுத்திகரிப்பு மையம் கட்டாயம் அமைத்து தரப்படும். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய ஆழ்துளை கிணறு அமைத்தும், புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதவிர சாலை வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் வருவாய்த்துறை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜயநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ தாயுமானவர், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்