பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 264 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகின்றனர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 264 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகின்றனர்.

Update: 2018-05-05 22:30 GMT
அரியலூர்,

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, நெல்லை, சேலம் உள்பட 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த பல மாணவ-மாணவிகளுக்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

‘நீட்’ தேர்வு எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 167 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 48 மாணவ-மாணவிகள் தமிழக அரசால் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு பயின்றனர். அவர்களுக்கு சென்னை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழி தேவி கூறுகையில், “தமிழக அரசால் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு பயின்ற 48 மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் ஆன்லைன் மூலம் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பதால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்த தகவல்கள் ஏதும் தற்போது தெரியவில்லை. விவரங்கள் முழுமையாக பெறப்பட்ட பின்னர் தெரிவிக்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றிருந்தால், அவர்கள் நாளை (திங்கட்கிழமை) மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் உரிய ரசீதுகளை காண்பித்து பயண கட்டணத்துடன் ரூ.1000 உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இருந்து அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 97 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வை இன்று எழுதவுள்ளனர் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் 264 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுத உள்ளனர். 

மேலும் செய்திகள்