நெல்லை அருகே நரசிங்கநல்லூரில் ரூ.23¼ கோடியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
நெல்லை அருகே நரசிங்கநல்லூரில் ரூ.23¼ கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள 432 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று திறந்து வைத்தார்.
நெல்லை,
நெல்லை அருகே நரசிங்கநல்லூரில் ரூ.23¼ கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள 432 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று திறந்து வைத்தார்.
432 வீடுகள்
நெல்லை மாநகராட்சி உட்பட்ட கீழத்தெரு, அன்னை இந்திரா நகர், செந்தமிழ் நகர், வாகைகுளம், குமரன் தெரு, தேவிபுரம், சர்தார்புரம் ஆகிய இடங்களில் உள்ள 7 குடிசை பகுதிகளை சேர்ந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு புதிய வீடு கட்டி வழங்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஏற்பாடு செய்தது. இதற்காக நரசிங்கநல்லூரில் 1.88 எக்டேரில் ராஜீவ் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.223.18 கோடி செலவில் 432 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டன.
இந்த குடியிருப்புகள் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
நெல்லையில் விழா
இதையொட்டி நெல்லை தாலுகா அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் ஒளிபரப்பு நிகழ்ச்சி மற்றும் புதிய குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பிரபாகரன் எம்.பி., நெல்லை தாசில்தார் கணேசன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயச்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர் சுபராஜ், உதவி பொறியாளர்கள் மாடசாமி, மஜீத், எழிலரசி மற்றும் முக்கிய பிரமுகர்கள் காபிரியேல்ராஜன், இ.நடராஜன், சேர்மபாண்டி, முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ‘‘நெல்லை பகுதியில் உள்ள குடிசையில் வாழ்ந்த மக்களுக்கு 432 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டு உள்ளன. இதில் ஹால், சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை, குடிநீர் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளாக கட்டப்பட்டு உள்ளனர். இதன் மூலம் 2,500 பேர் பயன் அடைவார்கள்’’ என்றார்.