போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: முக்கிய குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை

போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2018-05-03 23:48 GMT
புதுச்சேரி,

புதுவையில் சமீப காலமாக சிலரது வங்கிக் கணக்குகளில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பெருமளவு பணம் மோசடி செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக லாஸ்பேட்டை லட்சுமிநகரை சேர்ந்த பல்கலைக்கழக ஊழியர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் சந்துரு (30), கடலூர் காராமணிக்குப்பம் கமல் (28), சென்னை கொளத்தூர் ஷியாம் (27) அரசு டாக்டர் விவேக் என்ற விவேக் ஆனந்தன்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்துள்ளனர்.

கைதானவர்களிடம் போலீசார், இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் மட்டுமின்றி வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான சந்துருஜிக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சிறையில் உள்ள பாலாஜி, சந்துரு ஆகிய 2 பேரையும் சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதோடு இவர்களது வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் தொடர்புடைய புதுவையை சேர்ந்த மேலும் 2 குற்றவாளிகள் பற்றிய அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்