‘லிப்ட்’ கேட்பது போல் நடித்து கைவரிசை பிளஸ்-2 மாணவரை கடத்தி நகை, பணம் பறிப்பு

புதுவையில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து மோட்டார் சைக்கிளில் ஏறி பிளஸ்-2 மாணவரை கடத்திச் சென்று நகை, பணம் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-05-03 23:43 GMT
புதுச்சேரி,

புதுவை பூரணாங்குப்பம் ராஜீவ்கணபதி நகரை சேர்ந்தவர் ரவி. காரைக்காலில் உள்ள மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் விபின் ஷியாம்(வயது 19) பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தார்.

புஸ்சிவீதி-பாரதிவீதி சந்திப்பில் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் விபின் ஷியாமை வழிமறித்தனர். அவர்களில் ஒரு வாலிபர் காலில் அடிபட்டது போல நடித்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று லிப்ட் கேட்டுள்ளார். இதனால் பரிதாபப்பட்ட அவர், அவர்கள் 2 பேருக்கும் லிப்ட் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த 2 வாலிபர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். விபின் ஷியாம் இடையில் அமர்ந்திருந்தார். அவருக்கு பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக காலாப்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளை அந்த ஆசாமி ஓட்டிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விபின் ஷியாம், எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள் 2 பேரும் அவரை மிரட்டி அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். மரக்காணம் அருகே உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலையோரத்தில் கிடந்த மர குச்சியை எடுத்து விபின் ஷியாமை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வெள்ளி கைச்செயின், ஏ.டி.எம். கார்டு, ரூ.6,500 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இதனை தொடர்ந்து அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு அதே மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விபின்ஷியாம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்து நடந்த விவரத்தை கூறினார். அவரிடம் செல்போனை வாங்கி தனது வீட்டில் உள்ளவர்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் விரைந்து சென்று விபின்ஷியாமை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் வழக்குபதிவு விபின்ஷியாமிடம் நகை, பணத்தை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

லிப்ட் கேட்பது போல் நடித்து மாணவரை கடத்திச் சென்றபோது வழியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்