மூங்கில்மடுவு கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல் 22 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

மூங்கில்மடுவு கூட்டுறவு சங்க தேர்தலின் போது ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக 22 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

Update: 2018-05-03 22:15 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம், ஏரியூரை அடுத்த மூங்கில்மடுவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி நடந்தது. இதில் 98 பேர் மனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரியாக வடிவுமுத்து நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு இறுதிவேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது. மனு தாக்கல் செய்தவர்களில் 42 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் வேட்பு மனு தாக்கல் செய்த தி.மு.க., பா.ம.க. கட்சியினர் தேர்தல் அதிகாரி வடிவுமுத்துவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

22 பேர் மீது வழக்கு

இது குறித்து ஏரியூர் போலீசார் மோதலில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு அன்புராஜ் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பஸ்கள் நிறுத்தம்

ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு கடந்த மாதம் 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 24-ந்தேதி முதல் ஏர்கோல்பட்டிக்கு பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 28-ந்தேதியில் இருந்து 2-ந்தேதி வரை காலை மற்றும் மாலை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு பஸ்கள் ஓடவில்லை. தற்போது மூங்கில்மடுவு பகுதியில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த பகுதியில் பஸ்கள் ஓடுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பென்னாகரம்-ஏரியூர், மேச்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்