120 சரக்கு வாகனங்களை தணிக்கை செய்த வணிகவரித்துறை அதிகாரிகள்

தொப்பூர் அருகே 120 சரக்கு வாகனங்களை வணிகவரித்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். இ-வே பில் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

Update: 2018-05-03 23:00 GMT
நல்லம்பள்ளி,

சேலம் வணிகவரித்துறை அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நல்லப்பள்ளியை அடுத்த தொப்பூர் சுங்கச்சவாடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தனர். இந்த தணிக்கையில் சரக்கு ஏற்றி வரும் வாகனம் முறையாக பதிவு எண் கொண்டதா? பாரம் ஏற்றிய நாள் புறப்பட்ட நேரம் மற்றும் சேரும் நாள் நேரம் ஆகியவை குறித்தும், பொருட்களின் விபரம் மற்றும் வாகனத்தில் உள்ள சரக்குக்கு ஆன்லைன் மின் வழிச்சீட்டு முறையானதா? என்பன உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தனர்.

தணிக்கை செய்யப்பட்ட சரக்கு வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் பதிவு செய்தனர். மேலும் அவர்கள் வைத்துள்ள ஆன்லைன் மின் வழிச்சீட்டு போலியா அல்லது முறையானதா என்பது குறித்து ஆன்லைன் மூலம் சம்மந்தப்பட்ட இடத்திலேயே அதிகாரிகள் குழுவினர் சரிபார்த்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய அரசு கடந்த 1.7.2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி எனும் (ஜி.எஸ்.டி) வரியை இந்தியா முழுவதும் அமல்படுத்தியது. இந்த வரி அமலுக்கு வந்த பிறகு அந்தந்த மாநில கட்டுப்பாட்டில் இருந்த வரித்துறை சுங்க சாவடிகள் மூடப்பட்டன.

தற்போது மத்திய அரசு கடந்த 4.2.2018-ந்தேதி முதல் தொலை தூரமாக சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எங்கும் நிற்காமல், விரைவாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று பொருட்களை சேர்க்கும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், எங்கே சரக்கு ஏற்றப்படுகிறதோ அங்கேயே சரக்குகளுக்குரிய ஜி.எஸ்.டி. எனும் வரியை செலுத்தி,(இ-வே பில்) ஆன்லைன் மின்வழிச்சீட்டினை பெற்று, பொருட்களை கொண்டு சென்று சேர்க்கும் இடம் வரையிலும், அந்தந்த மாநில எல்லைக்குள் நுழையும் போது, வணிகவரித்துறையினர் செய்யும் வாகன தணிக்கையின் போது ஆன்லைன் மின்வழிச்சீட்டினை காண்பித்தால், அது போலியா? அல்லது உண்மையானதா ? என்பது குறித்து, சம்மந்தப்பட்ட இடத்திலேயே ஆன்லைன் மூலம் சரிபார்த்து உடனடியாக வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது நாங்கள் தர்மபுரி மாவட்ட எல்லைக்குள் நுழையும் வெளி மாநில சரக்கு பாரம் ஏற்றி வரும் வாகனங்களை, குழு அமைத்து சோதனை நடத்தினோம். இந்த சோதனையில் 120 சரக்கு வாகனங்களை ஆய்வு செய்தோம். அதில் அவர்கள் கொண்டு வந்த ஆன்லைன் வரி மின்வழிச்சீட்டு அனைத்தும், ஆன்லைன் மூலம் சரிபார்த்தில் அனைத்தும் சரியானதாகவே இருந்தது. மேலும் இந்த சோதனையின் போது அவர்கள் கொண்டு வரும் ஆன்லைன் மின்வழிச்சீட்டு போலியானதா என்பது குறித்து தெரியவரும் பட்சத்தில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது மட்டும் அல்லாமல் அபாரதமும் விதிக்கப்படும் என, சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு வணிவரித்துறை அதிகாரிகள் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது மாநில துணை வரி அலுவலர்கள் சிவகுரு, சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அவருடன் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்