கோவில் விழாவில் பக்தர்களிடம் நகை பறித்த 4 பெண்கள் கைது
ஊத்துக்குளி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்களிடம் நகை பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் நல்லகவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த கும்பாபிஷேக விழாவில் நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பொங்கியம்மாள் (வயது 75) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த சின்னம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டனர். கோவில் கும்பாபிஷேகத்தின்போது புனித நீர் பக்தர்கள்மீது தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு சென்றனர். இந்த நெரிசலில் பொங்கியம்மாளும், சின்னம்மாளும் சிக்கிக்கொண்டனர்.
புனித நீர் தெளித்த பிறகு பக்தர்கள் அனைவரும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது பொங்கியம்மாள், சின்னம்மாள் ஆகிய 2 பேரும் தாங்கள் அணிந்து இருந்த நகை உள்ளதா? என்று கழுத்தை பார்த்தபோது நகையை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவர்கள் அணிந்து இருந்த மொத்தம் 10 பவுன்நகையை மர்ம நபர்கள் பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கும்பாபிஷேக விழாவின் போது கோவில் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போட்டு பார்த்தனர். அப்போது பொங்கியம்மாள் மற்றும் சின்னம்மாள் ஆகியோர் அணிந்து இருந்த நகைகளை 4 பெண்கள் பறிக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது.
மேலும் நகைப்பறிப்பில் ஈடுபட்ட பெண்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று செங்கப்பள்ளி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த சரசு என்கிற சரஸ்வதி (52), இவருடைய மகள் சமந்தா (21), மற்றும் வசந்தி என்கிற தாரணி (32), இவருடைய தங்கை அஞ்சலி ஜோதி (24) என தெரியவந்தது. இவர்கள் 4பேரும் கூட்டாக சேர்ந்து நல்லகவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகையை பறித்து சென்றதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் இருந்து 10 பவுன்நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர்கள் 4 பேரும்அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.