நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்
விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று கலெக்டர் தண்டபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் வேளாண்மை துறை சார்பில் கிராம சுயராஜ்ய இயக்கத்தின் கீழ் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை தொடக்க விழா நடந்தது.
இந்த திட்டத்தின் நோக்கம் கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள 164 கிராமங்களில் தேசிய சமூக பொருளாதார சாதி வாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, இந்த பணிமனையில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைப்பதாகும். இந்த கணக்கெடுப்பு பணியை நாளைக்குள் (சனிக் கிழமை) முழுமையாக முடித்து அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அடிமட்ட பணியாளர்கள் முதல் அனைவரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
பிரதம மந்திரியின் கிஸான் கல்யாண் காரியசாலா திட்டத்தின் கீழ் விவசாய பாசன திட்டத்தின் மூலமாக உற்பத்தியை இரு மடங்காக பெருக்கினால் 2 மடங்கு வருமானம் கிடைக்கும். ஆகவே விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். இது பற்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே போதுமான அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு, விபத்து காப்பீட்டு திட்டம், மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், கழிப்பறை கட்டுதல் போன்ற 11 திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்டத்தில் உள்ள 1000 குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கை மையத்தினையும், அதில் 200 குடும்பங்களுக்கு துணை நம்பிக்கை மையத்தினையும் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு, அதன் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 லட்சத்து 15 ஆயிரம் விவசாயிகள் உள்ள நமது மாவட்டத்தில் உழவன் செயலியை 2,500 விவசாயிகளே பதிவிறக்கம் செய்துள்ளனர். அனைத்து விவசாயிகளும் செயலியை பதிவிறக்கம் செய்து, விவசாயம் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். கிராம அளவில் உற்பத்தி தொழிற்சாலைகளை விவசாயிகள் ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு நீங்களே விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் அளவுக்கு வர வேண்டும்.
அதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் காடாம்புலியூர் முந்திரி பொருளட்டு குழுவுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் முந்திரி பதப்படுத்தும் அலகினையும், காரைக்காடு கணேசன், ரவி ஆகியோருக்கு ரூ.4,480 மதிப்பில் சூரிய சக்தி விளக்கு பொறியினையும், வாண்டரசன்குப்பத்தை சேர்ந்த அறவாழிக்கு ரூ.750 மதிப்பில் அம்மா திரவ உயிர் உரம் மற்றும் மண் வள அட்டை, தோட்டக்கலை துறை சார்பில் ராமாபுரத்தை சேர்ந்த சிவபெருமானுக்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அனுமதி ஆணையும், அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அனுமதி ஆணை போன்ற நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விழாவில் சப்-கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜகோபால், வேளாண்மை துணை இயக்குனர்(உரங்கள்) சங்கர், தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜாமணி, வேளாண் விற்பனை துணை இயக்குனர் ஜெயக்குமார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வம், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) சம்பத்குமார், கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் துரைசாமி, தமிழ்நாடு கால்நடை துறை அதிகாரி சிலம்பரசன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் நன்றி கூறினார்.
விழாவையொட்டி கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நவீன உபகரணங்கள், விதைகள் போன்றவற்றை கலெக்டர் தண்டபாணி பார்வையிட்டார்.