ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் மாரியம்மன் கோவில் கொடை விழா
ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
மாரியம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் மாரியம்மன் கோவிலில் கொடை விழா கடந்த 27–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, வில்லிசை நடந்தது.
முதல் நாள் இரவில் அம்மன் சுப்பிரமணியராகவும், 2–ம் நாள் இரவில் அம்மன் விஷ்ணுவாகவும், 3–ம் நாள் இரவில் அம்மன் கிருஷ்ணராகவும், 4–ம் நாள் இரவில் அம்மன் சரசுவதியாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முளைப்பாரி எடுத்து...
விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் மதியம் அம்மன் மஞ்சள் நீராடி, தாமிரபரணி ஆற்றுக்கு சென்று, கும்பம் வீதி உலா வருதல் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆயிரம்கண்பானை, மாவிளக்கு பெட்டி, முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர். இரவில் வில்லிசை நடந்தது. பின்னர் சூலம் ஏந்திய சக்தியாக காட்சி அளித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
நேற்று மாலையில் அம்மன் மஞ்சள் நீராடி, கும்பத்துடன் வீதி உலா வந்தார். இரவில் வில்லிசை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தீர்த்த அபிஷேகம், காலை 9 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் அழகேசன் நாடார், பாலசிங் நாடார் மற்றும் விழா குழுவினர் செய்து உள்ளனர்.