விளாத்திகுளம், புதூர், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.35 கோடி செலவில் உற்பத்தி பொருள் சேமிப்பு குடோன்கள் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

விளாத்திகுளம், புதூர், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.35 கோடி செலவில் வேளாண் உற்பத்தி பொருள் சேமிப்பு குடோன்கள் அமைக்கப்பட உள்ளன என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

Update: 2018-05-03 22:00 GMT
தூத்துக்குடி, 

விளாத்திகுளம், புதூர், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.35 கோடி செலவில் வேளாண் உற்பத்தி பொருள் சேமிப்பு குடோன்கள் அமைக்கப்பட உள்ளன என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை 

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நிகழ்ச்சி வாகைகுளத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, கூட்டுப்பண்ணைத்திட்டத்தின் கீழ் 4 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர்கள், 10 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், 15 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு விவசாயத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது மின்னணு தொழில் நுட்பத்தில் வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்து விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையும் வகையில் உழவன் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயிர் காப்பீடு விவரம், உரம் இருப்பு, விதை இருப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் இந்த செயலியை பயன்படுத்தி அரசின் சேவைகளை பயன்படுத்தி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

குடோன்கள் 

மேலும், விவசாயிகள் தானியங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சேமித்து வைத்து அதிக விலை வரும்போது விற்பனை செய்து தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம். இதற்காக விளாத்திகுளம், புதூர் ஆகிய பகுதிகளில் சேமிப்பு குடோன்களும், ஸ்ரீவைகுண்டத்தில் வாழைப்பழங்கள் சேமிப்பு குடோனும் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. விவசாய பொருட்களை மேம்படுத்தி சந்தைப்படுத்துவதற்காக ரூ.384 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருட்களின் மீது பயிர் காப்பீடு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் முத்து எழில், வேளாண்மை துணை இயக்குனர் ஜெகநாதன், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராமலிங்கம், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) ஆனந்த்பாபு, தோட்டக்கலை துணை இயக்குனர் சரசுவதி, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) மகாதேவன் ஸ்காட் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் ஆனந்த், ஸ்காட் கே.வி.கே. திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்