பா.ஜனதா தேர்தல் அறிக்கை நாளை பெங்களூருவில் வெளியீடு - எடியூரப்பா

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேர்தல் அறிக்கை நாளை பெங்களூருவில் வெளியிடுவதாக எடியூரப்பா கூறினார்.

Update: 2018-05-02 23:01 GMT
சிவமொக்கா,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேர்தல் அறிக்கை நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் வைத்து வெளியிடப்பட உள்ளது என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவரும், சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதி வேட்பாளருமான எடியூரப்பா நேற்று சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி ஏதும் அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. பா.ஜனதா மக்கள் ஆதரவுடனும், தனிப்பெரும்பான்மையுடனும் வெற்றிபெற்று முழுபலத்துடன் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும். நான்(எடியூரப்பா) பெங்களூருவில், பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் முன்னிலையில் கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன்.

மத்தியில் கடந்த 4 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். அதனால்தான் நாட்டில் 21 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார். நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிக்கை வெளியான பிறகு பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

தேர்தல் அறிக்கையில் விவசாயக்கடன் தள்ளுபடி, மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, சுற்றுலாவை மேம்படுத்த அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது, சிவமொக்காவில் முழுமையாக விமான நிலையத்தை செயல்பட வைப்பது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஊழல் வழக்கில் சிக்கிய ஜனார்த்தனரெட்டியுடன் கைகோர்த்துள்ள பா.ஜனதா தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் இருக்கிறதா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பா.ஜனதாவின் குறிக்கோள். மேலும் வடகர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு வலிமையான வேட்பாளர்கள் தேவை. அதனால் பல்லாரி, சித்ரதுர்கா பகுதிகளில் வலிமையாக உள்ள ரெட்டிகளின் உதவிபெற்று தேர்தலில் வெற்றிபெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் தவறு ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

மேலும் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை, பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசியது குறித்து பேசுகிறார்கள். இது தேவேகவுடா மீது நரேந்திர மோடி வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. ஏனெனில், தேவேகவுடா இந்த மண்ணின் மகன், அரசியலில் மிகுந்த அனுபவசாலி. அவர் மீது பிரதமர் மோடி மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றார். அதனால்தான் அவரை பிரதமர் புகழ்ந்து பேசினார்.

இதை மையமாக வைத்து பா.ஜனதாவுக்கும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் கூட்டணி உருவாகி உள்ளது, தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை அமைந்தால் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி உறுதியாகிவிடும், இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று பலர் கூறி வருகிறார்கள். ஆளுக்கொரு கருத்தை வெளியிடுகிறார்கள். தற்போதுள்ள நிலவரப்படி பா.ஜனதா கட்சி, மக்களிடம் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்