தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள செல்போன் செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்

தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள செல்போன் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.

Update: 2018-05-02 22:52 GMT
பெங்களூரு,

தேர்தல் ஆணையத்தின் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடி தெரியாததால், சுமார் 25 சதவீத வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டுவது இல்லை என்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அத்தகைய வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் என்ற பெயரில் ஒரு செல்போன் செயலியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதை இன்று(அதாவது நேற்று) அறிமுகம் செய்துள்ளோம்.

இதில் நகரங்களில் எந்த ரோட்டில் சென்றால் வாக்குச்சாவடிகளை விரைவாக சென்றடைய முடியும் என்பது பற்றிய விவரங்கள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. கர்நாடகத்தில் பூகோள விவரங்களை அறிய முடியும். 56 ஆயிரத்து 696 வாக்குச்சாவடிகள் மற்றும் அதன் வரைபடம், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்குச்சாவடி குறித்த முழு விவரங்கள் கிடைக்கும்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எவ்வளவு பேர் வரிசையில் இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும். அருகில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பற்றியும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ‘டேஷ்போர்டு‘ என்ற ஒரு மென்பொருளை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களும் அதில் கிடைக்கும். வாக்குச்சாவடி எல்லை, வாக்காளர்களின் எண்ணிக்கை, வேட்பாளர் விவரங்கள், வாக்காளர் பட்டியல் விவரம், முந்தைய தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்கள், வெற்றி பெற்றவர்கள், வாக்குகள் வித்தியாசம் போன்ற அனைத்து தகவல்களும் அதில் கிடைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்