விருகம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தரகர் கைது

கடனாக வாங்கிய பணத்துக்கும் கூடுதலாக கேட்டு சினிமா தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தரகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-02 22:41 GMT
பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 45). தமிழ் சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த 2016-ம் ஆண்டு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகர் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார்.

இதற்காக சாலிகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற தரகர் மூலம் வடபழனியை சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் ரூ.25 லட்சத்தை கடனாக வாங்கி இருந்ததாகவும், கடன் தொகை பெறுவதற்காக தொகை நிரப்பப்படாத காசோலை, பத்திரங்கள், வெற்று பத்திரத்தில் கையெழுத்து போட்ட ஆவணங்களை கொடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் விருகம்பாக்கம் போலீசில் ஜான் ஸ்டீபன் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் சினிமா படம் தயாரிக்க முடிவு செய்து, பத்மாவதி என்பவரிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் சில காரணங்களால் அந்த படம் எடுக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் அவர் கடனை திருப்பி தரும்படி கேட்டதால் வட்டியுடன் சேர்த்து இதுவரை சுமார் ரூ.40 லட்சம் கொடுத்து விட்டேன்.

ஆனால் கடந்த சில தினங்களாக செல்போனில் தொடர்பு கொண்ட நபர், கூடுதலாக ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் கடனுக்காக உன்னிடம் வாங்கிய பத்திரங்களை திருப்பிக்கொடுப்போம். இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கடன் வாங்கி கொடுக்க உதவியாக இருந்த தரகர் ரமேஷ், ரவுடி ஈஸ்வர்தேஜி என்பவரை வைத்து செல்போன் மூலம் சினிமா தயாரிப்பாளர் ஜான் ஸ்டீபனை மிரட்டி பணம் கேட்டது தெரியவந்தது.

இதையடுத்து தரகர் ரமேசை போலீசார் கைது செய்தனர். ஜான் ஸ்டீபனை செல்போனில் மிரட்டிய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்