ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

கூடங்குளம் அணுஉலை, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று சுப.உதயகுமார் கூறினார்.

Update: 2018-05-02 23:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காவல்துறை மூலம் மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுகிறது. போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்களை முறைப்படி விசாரிக்காமல் அவர்களை அடித்தும், உதைத்தும் வருகிறார்கள். இதுபோன்ற காவல்துறை அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால் வருகிற 27-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கும். மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற சட்டம், ஒழுங்கு பாதிப்பை விசாரிக்க நேர்மையான அதிகாரிகளை கொண்டு சமாதான குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

தமிழகம் மதுவால் அழிவு பாதைக்கு சென்று கொண்டு இருக்கிறது. ஆளும் கட்சியினர் தனியார் மதுக்கடையை 24 மணி நேரமும் நடத்தி வருகிறார்கள். இதனை தடுக்க இளைஞர்கள் போராட வேண்டும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 25 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை பலர் இறந்துள்ளனர். இந்த ஆலையை மூட தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். கூடங்குளம் அணுஉலையையும், ஸ்டெர்லைட் ஆலையையும் மூட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் பெண்களை பற்றியும் அரசியல் தலைவர்களை பற்றியும் தவறாக பேசி வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை கைது நடவடிக்கை இல்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு ஒன்றும் செய்யப்போவது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கே கால அவகாசம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு நிச்சயமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது.

முன்னதாக மனித உரிமை மீறலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார் தலைமை தாங்கினார். நிலத்தடி நீர் பாதுகாப்பு தலைவர் ராஜா, மாமன்னர் பூலி தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் செம்மணி, கார்த்திக் மாறன், முனீசுவரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்