தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு விமான தளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது
தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு விமான தளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது என்று இந்திய கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குனர் மூர்த்தி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் பாபுவெங்கடேஷ் தலைமை தாங்கினார். சென்னை மண்டல இந்திய கடலோர காவல்படை கமாண்டர் ராஜன் பர்கோத்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குனர் வி.எஸ்.ஆர்.மூர்த்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் கடலோர காவல்படை வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாட்டின் கடலோர பகுதிகளை பாதுகாப்பதில் இந்திய கடலோர காவல்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடலோர காவல்படைக்கு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு கடலோர காவல்படையின் பொறுப்பு மற்றும் சவால்கள் அதிகரித்து உள்ளன. மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கடலோர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடலோர காவல்படை முழுமையாக தயார் நிலையில் உள்ளது.
நாடு முழுவதும் 42 கடலோர காவல்படை நிலையங்கள் உள்ளன. விமான தளங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. வரும்காலத்தில் புதிய விமான தளங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் கடலோர காவல்படைக்கு விமான தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் அந்த பணி முடிக்கப்பட்டு விமான தளம் அமைக்கப்படும். இந்த விமான தளத்தில் இருந்து டோர்னியர் ரக விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் இயக்க முடியும்.
கடலோர காவல்படையின் மற்றொரு முக்கியமான பணி தேடுதல் மற்றும் மீட்பு பணியாகும். இதற்காக மும்பை, சென்னை, போர்ட்பிளேர் ஆகிய 3 இடங்களில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களுக்கு வரும் தகவல்கள் அடிப்படையில் உடனடியாக தேவைக்கு ஏற்ப, கப்பல், விமானம் உள்ளிட்டவை மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. நாட்டில் 20 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் அவசரகால எச்சரிக்கை கருவி பொருத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.