பழனி, ஒட்டன்சத்திரம் உள்பட 7 இடங்களில் வழிப்பறி: திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது
பழனி, ஒட்டன்சத்திரம் உள்பட 7 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21½ பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, பழனி மற்றும் குஜிலியம்பாறை உள்பட 7 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், தனியாக சென்ற பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். ஒரே நாளில் 7 இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்படி பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, கள்ளிந்தையம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியராஜா, திண்டுக்கல் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோரை கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து விசாரித்தனர். இதில் திருச்சி புத்தூர் மீன்காரதெருவை சேர்ந்த கோபி என்ற கோவிந்தராஜ் (வயது 23), திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த ராஜா (25) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 21½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பாராட்டினார். மேலும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை, போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.