கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேருக்கு வாந்தி-மயக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

திருமக்கோட்டை அருகே கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Update: 2018-05-02 23:00 GMT
திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே வடக்கு தென்பரை வடக்கு தெருவை சேர்ந்த 10 குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடிநீர் குடித்ததால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதில் 20 பேர் திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 3 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருமக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர் டாக்டர் ஹரிபிரசாத் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் முகமது முகைதீன், நடமாடும் மருத்துவ குழுவை சேர்ந்த விஜய் ஆனந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளைச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவானந்தம், குமார் ஆகியோர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், ஓ.ஆர்.எஸ். பவுடர் வழங்கினர். தெருக்களில் ‘ப்ளச்சிங்’ பவுடர் தூவினார்கள்.

தகவல் அறிந்த கோட்டூர் ஒன்றிய ஆணையர் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் கென்னடி பூபாலராயன், வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வெளியேறும் நீரானது, கீழே தேங்கி நிற்கும் கழிவு நீர் கலந்த தண்ணீருடன் கலந்து குழாய் வழியாக சென்றது தான் வாந்தி-மயக்கம் ஏற்பட காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்