மாவட்டத்தில் 7 மையங்களில் 6-ந் தேதி ‘நீட்’ தேர்வு 5,560 பேர் எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி 7 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 5,560 பேர் எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

Update: 2018-05-02 22:15 GMT
நாமக்கல்,

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட் தேர்வு) வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

இத்தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் நேஷனல் பப்ளிக் பள்ளி, டிரினிடி அகாடமி, பாரதி அகாடமி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, நவோதயா அகாடமி மற்றும் செல்வம் தொழில்நுட்ப கல்லூரி என 7 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 5,560 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். 6-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் இத்தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைகிறது.

நுழைவு சீட்டு

இத்தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள மாணவ, மாணவிகளுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதில் அவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 7.30 மணிக்கு வர வேண்டுமா? அல்லது 8.30 மணிக்கு வர வேண்டுமா? என்பது தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் காலை 9.30 மணிக்கு மேல் வரும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தனர். இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்