ஈரோட்டில் பரிதாபம்: சரக்கு ஆட்டோ சக்கரத்தில் சிக்கி குழந்தை தலை நசுங்கி சாவு
ஈரோட்டில் சரக்கு ஆட்டோ சக்கரத்தில் சிக்கி குழந்தை தலை நசுங்கி பரிதாபமாக இறந்தது.
ஈரோடு,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு நிஷாந்தினி (வயது 6), காவியாஸ்ரீ (2) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் தனது குடும்பத்துடன் ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரில் குடியேறினார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவியாஸ்ரீக்கு 2-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை காவியாஸ்ரீ வீட்டின் முன்பு உள்ள ரோட்டில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் போடுவதற்காக சரக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது.
சரக்கு ஆட்டோவில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு வினியோகம் செய்துவிட்டு டிரைவர் சரக்கு ஆட்டோவை பின்நோக்கி நகர்த்தினார். அப்போது சரக்கு ஆட்டோ காவியாஸ்ரீ மீது மோதியது. இதில் கீழே விழுந்த குழந்தையின் தலையில் சரக்கு ஆட்டோவின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் தலை நசுங்கி படுகாயம் அடைந்த காவியாஸ்ரீ உயிருக்கு போராடி கொண்டு இருந்தாள். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு காவியாஸ்ரீ கொண்டு செல்லப்பட்டாள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காவியாஸ்ரீயின் உடலை பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதற்கிடையே சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.